Last updated: 7 Sep, 2021

ஆரோவில் பற்றிய சுருக்கமான தகவல்கள் (Auroville in brief)

ஆரோவில் என்றால் என்ன?

ஆரோவில் என்பது ஒரு சர்வதேச நகரமாகும். இங்கு உலகம் முழுவதிலிருந்தும் வந்து 50,000 பேர் வசிக்கக்கூடிய நகரமாக இது திட்டமிடப்பட்டுள்ளது.

 

ஆரோவில் எவ்வாறு உருவானது?

ஆரோவில்லின் நோக்கம் – மனிதஇன ஒற்றுமையை பரிசோதித்துப் பார்ப்பதற்காக இந்த இலட்சிய நகரம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 1930-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே  ஸ்ரீ அன்னைக்கு  இத்தகைய நகரத்தை உருவாக்கவேண்டும் என தோன்றியது. 1960-ஆம் ஆண்டு மத்தியில் பாண்டிச்சேரி ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி இதுபோன்ற நகரத்தை உருவாக்கவேண்டும் என ஸ்ரீ அன்னையிடம் தெரிவித்தது. அதற்கு ஸ்ரீ அன்னை தம் ஆசீர்வாத்தை அளித்தார். பின்னர் இக்கருத்துரு இந்திய அரசாங்கத்தின் முன்வைக்கப்பட்டது, அதற்கு அது தனது ஆதரவை அளித்தது. மேலும், யுனெஸ்கோவின் பொதுசபைக்கு எடுத்து சென்றது. 1966-ஆம் ஆண்டு யுனெஸ்கோ எதிர்கால மனித சமுதாயத்திற்கு இது முக்கியமான திட்டம் என பாராட்டி ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றி, இதற்கு தனது முழு ஆதரவையும் அளித்தது.

 

ஆரோவில் ஏன்?

வேற்றுமையில் மனிதஇன ஒற்றுமையை உருவாக்குவதே ஆரோவில்லின் நோக்கம் ஆகும். இன்றைக்கு ஆரோவில் மட்டுமே சர்வதேச அளவில் மனிதஇன ஒற்றுமை, ஜீவியத்தின் திருவுருமாற்றம் ஆகியவற்றின் பரிசோதனைக்குரிய முதல் மற்றும் ஒரே நகரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலையான வாழ்வு, எதிர்கால மனித குலத்திற்கு தேவையான பண்பாட்டு, சுற்றுச்சூழல், சமூக, ஆன்மிகத் தேவைகள் ஆகியவற்றில் அக்கறையுடன் நடைமுறையில் ஆராய்ச்சி செய்து வருகின்றது.

 

ஆரோவில் எப்போது தொடங்கியது?

28.02.1968 அன்று வருங்கால நகரமான ஆரோவில்லின் தொடக்க விழாவில், நகரத்தின் மையப் பகுதியான ஆலமரத்தின் அருகே, இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் 121 நாடுகளின் பிரதிநிதிகள் சுமார் 5,000 பேர் கூடியிருந்தனர். இப்பிரதிநிதிகள் தங்கள் சொந்த மண்ணில் இருந்து கொண்டுவந்த மண்ணை, ஆம்பித்தியேட்டரில் வைக்கப்பட்ட, சலவைக் கல்லால் ஆன தாமரை மொட்டு வடிவத் தாழியினுள் இட்டனர்.  அதேநேரத்தில், 4 அம்சங்கள் கொண்ட ஆரோவில் சாசனத்தை ஸ்ரீ அன்னை அளித்தார்.   

 

ஆரோவில் எங்கே உள்ளது?

ஆரோவில் தென்னிந்தியாவில், அதன் பெரும்பாலான பகுதி தமிழ்நாட்டிலும் (சில பகுதிகள் புதுச்சேரியிலும்) அமைந்துள்ளது. கிழக்கு கடற்கரை பகுதியிலிருந்து சில கிலோமீ்ட்டர் தூரத்திலும், சென்னைக்கு தெற்கே சுமார் 150 கி.மீ மற்றும் புதுச்சேரிக்கு வடக்கே 10 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.

 

ஆரோவில்வாசிகள் என்பவர்கள் யார்?

அவர்கள் சுமார் 52 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து இங்கு வந்துள்ளனர் (குழந்தை முதல் 80 வயதுக்கு மேற்பட்டோர் வரை). அனைத்து சமூக, பண்பாட்டு பின்னணிகளைக் கொண்டுள்ள அவர்கள் ஒட்டுமொத்த மனிதஇனத்தை பிரதிநிதித்துவம் செய்கிறார்கள். இந்நகரத்தின் மக்கள்தொகை தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகின்றது. ஆனால், தற்போது சுமார் 2500 பேர் உள்ளனர். இதில் இந்தியர் சுமார் மூன்றில் ஒரு பகுதி ஆவார்.

 

நகரத் திட்டம் பற்றிய ஒரு கண்ணோட்டம்
அமைதிப் பகுதி, நகரப் பகுதி & பசுமை வளையப் பகுதி

 

அமைதிப் பகுதி (Peace Area)

நகரத்தின் மையப் பகுதி அமைதிப் பகுதியாகும். அதில் மாத்ரிமந்திர், அதன் தோட்டங்கள், ஆம்பித்தியேட்டர் ஆகியவை அமைந்துள்ளன. ஆம்பித்தியேட்டரில் மனிதஇன ஒற்றுமையின் அடையாளமாகத் திகழும் தாழியினுள் 121 நாடுகளில் இருந்தும், இந்தியாவின் 23 மாநிலங்களில் இருந்தும் கொண்டுவரப்பட்ட மண் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளது. சாந்தம் மற்றும் அமைதியான சூழலை ஏற்படுத்துவதற்கு உதவியாகவும், நிலத்தடி நீரை மீள்நிரப்பவும் ஒரு ஏரி இங்கு அமைந்து வருகிறது.

 

 

தொழிற்கூட மண்டலம் (Industrial Zone)

அமைதிப் பகுதியின் வடக்கே 109 ஹெக்டேர் பரப்பளவில் தொழிற்மண்டலம் அமைந்துள்ளது. “பசுமை” (சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத) தொழிற்கூடங்களைக் கொண்ட ஒரு மண்டலம் ஆகும். தன்னாதரவு பெற்ற நகரமாக இருப்பதற்கு ஆரோவில் எடுத்துவரும் முயற்சிகளுக்கு இவை உறுதுணையாக உள்ளன.  இம்மண்டலத்தில் சிறிய மற்றும் நடுத்தரமான தொழிற்கூடங்கள், பயிற்சி மையங்கள், கலைகள் மற்றும் கைவினைகள், நகர நிர்வாக அமைப்பு ஆகியவை அமைந்துள்ளன.  

 

 

குடியிருப்பு மண்டலம் (Residential Zone)

இந்நான்கு நகர மண்டலங்களில் மிகப் பெரியதான குடியிருப்பு மண்டலம் 189 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. அதன் வடக்கு, தெற்கு, மேற்கு ஆகிய திசைகளில் பூங்காக்களை எல்லையாகக் கொண்டுள்ளது. இம்மண்டலத்திற்கு வருவதற்கான முக்கிய சாலையாக கிரவுன் சாலை (சுற்றுவட்டச் சாலை) இருக்கும். அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கத்தை குறைக்க, இதிலிருந்து ஐந்து ரேடியல் சாலைகள் (ஆரச் சாலைகள்) பிரிக்கப்பட்டுள்ளன. தனிப்பட்ட மற்றும் கூட்டு வாழ்க்கைக்கு இடையே நன்கு திட்டமிடப்பட்ட குடியிருப்பை அமைத்துதர விரும்புகிறது. இம்மண்டலம் 55%  பசுமைப் பகுதியையும், 45% மட்டுமே கட்டிடங்கள் பகுதியைக் கொண்டிருக்கும். இதன்மூலம் இயற்கை சமநிலைகொண்ட ஒரு நகரமாக உருவாக்கப்பட்டு வருகின்றது.

 

பன்னாட்டு மண்டலம் (International Zone)

அமைதிப் பகுதியின் மேற்கே 74 ஹெக்டேர் பரப்பளவில் பன்னாட்டு மண்டலம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு கண்டங்களைச் சேர்ந்த நாடுகளின் மற்றும் பண்பாடுகளின் அரங்குகள் அமைந்து வருகின்றன.  ஒவ்வொரு நாட்டின் மேதாவித்தனத்தின் வெளிப்பாடு, மனிதஇனத்திற்கான பங்களிப்பு ஆகியவற்றின் மூலம் வேற்றுமையில் மனிதஇன ஒற்றுமையின் ஒரு வாழும் செயல்முறை விளக்கமாகத் திகழுவதற்கு முக்கிய கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.    

 

பண்பாட்டு மண்டலம் (Cultural Zone)

அமைதிப் பகுதிக்கு கிழக்கே 93 ஹெக்டேர் பரப்பளவில் பண்பாட்டு மண்டலம் அமைக்கத்  திட்டமிடப்பட்டுள்ளது. இது கல்வி மற்றும் கலை வெளிப்பாட்டுக்கான பயன்முறை ஆராய்ச்சிக்கு உரிய இடமாக இருக்கும். பண்பாடு, கல்வி, கலை, விளையாட்டு ஆகிய செயல்பாடுகளுக்கான வசதிகள் இங்கு அமையும்.

 

பசுமை வளையப் பகுதி (Green Belt)

நகரப்பகுதி 1.25 கி.மீ. சுற்றளவில், 1.25 கி.மீ அகலத்தால் பசுமை வளையத்தால் சூழப்பட்டுள்ளது. இயற்கைமுறை வேளாண் பண்ணைகள், பால் பண்ணைகள், பழத்தோட்டம், காடுகள், வனப் பகுதிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.  இவ்வளையப் பகுதி, நகர்ப்புற ஆக்கிரமிப்பு செய்வதைத் தடுக்க உதவும்.  பல்வேறு வன விலங்குகளுக்கு வாழுமிடமாகத் திகழ்கிறது. உணவுப் பொருட்கள், மரங்கள், மருந்துகள் போன்றவற்றிற்கு ஒரு ஆதாரமாகவும், பொழுதுபோக்கு இடமாகவும் இருக்கும்.  

 

பசுமை வளையப் பகுதி, தற்போது 405 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது – அது இன்னும் முழுமை பெறவில்லை - வறண்ட நிலங்களில் பசுமையான காடுகள் வளர்க்கப்பட்டு, உயிரினங்கள் வாழ்வதற்குரிய ஒரு வெற்றிகரமான சூழல் அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது ஓர் எடுத்துகாட்டாக அமைந்துள்ளது. மேலும் 800 ஹெக்டேர் நிலம் வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில், மண் மற்றும் நீர்ப் பாதுகாப்பு, நிலத்தடி நீர் மீளூட்டம், சுற்றுச்சூழல் மீட்பு ஆகியவை மேற்கொள்ளப்பட்டு, அவற்றுக்கான ஒரு முக்கிய செயல்விளக்க இடமாக அது திகழும். நகரம் முழுவதற்கும் நுரையீரலாக விளங்கும் இப்பகுதியில், எஞ்சியுள்ள இப்பணிகள் முடிந்ததும், பல தசாப்தங்களுக்கு முன்பு ஆரோவில் தொடங்கிய இப்பசுமைப்பணி முழுமை பெறும்.